தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைப்பு.. யார் யார் இடம்பெற்றுள்ளது தெரியுமா? - ஹரிபத்மன்

உலக புகழ்பெற்ற அறக்கட்டளையான கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க முன்னாள் டிஜிபி லத்திகா சரண், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Apr 4, 2023, 9:31 AM IST

சென்னை: மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவான்மியூர் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்கள் சிலர் கடந்த வாரம் இரு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கல்லூரிக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரவு பகலாக நீடித்த போராட்டம் ஊடக வெளிச்சம் காரணமாக தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பிறகு மாணவிகள் போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ்.ஏ.குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க:சென்னை தாம்பரத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய புகாருக்கு ஆளான பேராசிரியர் ஹரிபத்மனை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். 10 நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக போலீசார் விசாரணையின் போது மாணவிகளிடம் சகஜமாக பழகியதை பாலியல் தொல்லை என மிகைப்படுத்தி தன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்லூரியில் இருந்து வெளியேறிய மாணவி வேறு காரணங்களுக்காக தான் வெளியேறினார் என்று ஹரிமத்மன் கூறியிருந்தார்.

இந்நிலையில், கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் ஐபிஎஸ், மருத்துவர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் ஹரிபத்மன் சஸ்பெண்ட் மற்றும் சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கலாஷேத்ரா பாலியல் வழக்கு: பேராசிரியர் ஹரிபத்மன் புழல் சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details