சென்னை:கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம், குழந்தையை கொன்றது ஒரு குற்றம், நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம் இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார்? என நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வசனங்களால் வாதாடும் பாராசக்தி நீதிமன்ற வசனத்தை யாராலும் மறக்க முடியாது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கதை, வசனத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து 1952ஆம் ஆண்டு வெளியான படம் பராசக்தி. சமூக சிந்தனையும், புரட்சிகரமான வசனங்களும் இளம் ரத்ததை துடிப்பேற்றும் சிவாஜி கணேசனின் நடிப்பும் இந்த படத்திற்கான மாபெரும் வெற்றி.
அந்த கால கட்டத்திலேயே ஒரு வருடம் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது மக்கள் அந்த படத்திற்கு கொடுத்த வரவேற்பு. சிவாஜி கணேசனை தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு, பராசக்தி படத்தின் இயக்குநர் அவதாரம். இப்படி பல பெருமைகளுக்கு உரித்தான பராசக்தி(parasakthi) திரைப்படம் இன்றளவும் மக்கள் மத்தியில் மங்காத இடத்தை தக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மகளிரணி சார்பில் இன்று சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் பராசக்தி திரைப்படம் திரையிடப்பட்டது. முன்னதாக இதற்கென்று நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, பூச்சி முருகன், தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் பிரபு, பராசக்தி திரைப்படம் மீண்டும் திரையிடப்படுவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பராசக்தி படத்தில் வசனம் பெரியதா, வசனம் பேசியவர் பெரியதா என்று விவாதம் செய்தார்கள். இரண்டுமே பிரமாதம் என்று மக்கள் கூறினார்கள்.
அந்த அளவிற்கு படம் அனைவரையும் சென்றடைந்தது. மேலும் இந்த படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு உள்ளிட்ட குழுவினர்களை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட படத்தை கலைஞர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டு களித்தனர்.
இதையும் படிங்க:'அடிமைப்பெண்' முதல் 'அண்ணாத்த' வரை.. அரை நூற்றாண்டாய் ராகங்களை ஆண்ட எஸ்.பி.பி.. 77வது பர்த்டே ஸ்பெஷல்!