சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.17) ஆய்வு மேற்கொண்டார். நாளையும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த பிப்ரவரி மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அரசு திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார். முன்னதாக, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுப் பணிகளை நேரில் ஆய்வு நடத்த உள்ளார்.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான 'கள ஆய்வில் முதல்வர்' திட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், நாளையும் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் மறைமலைநகரில் உள்ள வளர்ச்சி மாநில நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காலை 11.00 மணிக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட பின், மாலை 4 மணிக்கு ஐஜி, டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சென்னை காவல் ஆணையர் தவிர்த்து தாம்பரம் ஆவடி காவல் ஆணையர் ஆகியோர்களுடன் ஆலோசனை செய்தார்.
குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை விவரங்களையும் கேட்டறிந்த முதல்வர் மக்களுக்கான திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு, அதன் பயன் அவர்களைச் சென்றடைய வேண்டும் என அங்குள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது குறித்த காணொளி பதிவை தனது X பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில், 'கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைத் திட்டங்கள், வீடு கட்டும் திட்டம், குடிநீர் வழங்கல் திட்டம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தேன். மக்களுக்கான திட்டங்கள் விரைவாகச் செயல்படுத்தப்பட்டு, அதன் பயன் அவர்களைச் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா: எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் இடையே சலசலப்பு..