சென்னை:தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று (ஜூலை22) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கக்கன் திரைப்பட ஒலி நாடா மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார். திரைப்படத்தின் ஒலி நாடாவை முதலமைச்சர் வெளியிட கக்கன் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர், தமிழ்நாடு அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், கக்கன். அவரது வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஜோசப் பேபி "கக்கன்" திரைப்படத்தை தயாரித்துள்ளார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், கே.எஸ். அழகிரி, "மணிப்பூரில் நடந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? பத்திரிகை செய்திகள் வந்ததே தவிர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதைத் தவிர, அறிக்கை அளித்ததைத் தவிர உடனடியாக கிடைத்த நீதி என்ன? உடனடியாக கிடைத்த தீர்வு தான் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ''70 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மணிப்பூர் சம்பவத்திற்கு இதுவரை பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார். நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் விவாதிக்கத் தயாராக உள்ளது. ஆனால், பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.