தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் - கடம்பூர் ராஜு - சென்னை செய்திகள்

சென்னை: திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் இதுவரை பதிவு செய்துகொள்ளாத உறுப்பினர்கள், சங்கங்கள் அனைவரும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

kadampur raju
kadampur raju

By

Published : Nov 4, 2020, 6:59 PM IST

திரைப்படத் துறையினர் நலன் காப்பதற்கென தமிழ்நாடு அரசால் அமைக்கப்பெற்று சிறப்புடன் செயலாற்றிவரும் திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவு செய்துகொண்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசின் நலத்திட்டங்களும் அவற்றின் பலன்களும் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு இலவசமாக அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இருப்பினும் சில அமைப்புசாரா சங்கத்தினர் தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, வழங்கப்பட்ட தீர்ப்புரையில் உறுப்பினர் சேர்க்கை குறித்து சில நெறிமுறைகள் வழங்கியதோடு குறிப்பிட்ட கால வரையறைக்குள் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அதன் தொடர்ச்சியாக திரைத் துறையில் பணியாற்றிவரும் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த கலைஞர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த அமைப்புகள், சங்கங்கள் மூலம் விண்ணப்பங்களை நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை "உறுப்பினர் செயலர், திரைப்படத் துறையினர் நலவாரியம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2" என்ற முகவரியில் சேர்த்திட வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள், வழிமுறைகளை மேற்கண்ட அலுவலகத்தில் அனைத்து அரசு வேலை நாள்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 20.11.2020 மாலை 05.00 மணிக்குள் மேற்கண்ட முகவரியில் அனுப்பிவைக்க வேண்டும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

ஏற்கெனவே பதிவுசெய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பிக்காமல் இருப்பவர்கள் இதே முறையில் தங்கள் உறுப்பினர் பதிவை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனச் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்ட செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details