கபடி வீராங்கனை கவிதா செல்வராஜ் செய்தியாளார் சந்திப்பு சென்னை:குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் 2023ம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். அதில் கபடி வீராங்கனை கவிதா செல்வராஜ் உட்பட 3 பேருக்கு தயான் சந்த் விருது வழங்கப்பட்டது. ’
இதையடுத்து கவிதா செல்வராஜ் இன்று டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அவரது உறவினர்கள் கபடி வீரர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ இந்தியா கபடி அணியின் கேப்டனாகவும், இந்தியன் கபடி அணிக்குப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது குடியரசுத் தலைவர் கையால் இந்த விருதை வாங்கியது பாக்கியமாகக் கருதுகிறேன்.
இதே போல் நிறைய வீரர்கள் உருவாக வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை அது மட்டுமின்றி இந்த விருது எனக்குச் சிறப்பான விருது. 4 முறை உலக அளவில் விளையாடும் போது அர்ஜுனா விருது வாங்குவதற்கு நான் விண்ணப்பிக்காமல் விட்டுவிட்டேன். அதை விண்ணப்பித்திருந்தால் இன்று அர்ஜுனா விருது பெற்றவராக இருந்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு வீரராக இருந்து பயிற்சியாளராகத் தொடர்வதன் மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்கும் எனக்கு நிறைய மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் கபடியில் முதல் பெண்ணாக விருது வாங்கியதும் நான் தான். இந்த பெருமையும் பெற்றுள்ளேன் தமிழ்நாட்டின் வரலாறு இது. தாமதமாகக் கிடைத்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு வரலாற்றில் கொண்டு போய் என்னைச் சேர்க்கும் அளவிற்கு என்னை நிறுத்தியுள்ளது.
தமிழகத்திற்குத் தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்து உள்ளேன். அதன் பிறகு பெண்கள் அதிக அளவில் கபடிக்கு விளையாட வரவில்லை, இந்திய அணியில் இருந்து கபடி வீரர்கள் தேர்வாகவே இல்லை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கபடிக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு அதிகளவில் வீரர்களை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
எல்லாரும் விளையாட்டுக்கு வரும் போது வரக்கூடிய சிக்கல் எனக்கும் வந்தது எனது தாய் என்னை விளையாட்டுக்கு அனுப்பவில்லை. எனது தந்தையின் அனுமதியுடன் மீண்டும் கபடி விளையாடச் சென்றேன். திருமணம் ஆன பின்பும் நான் விளையாடுவதற்கு வந்துள்ளேன். பெண்களால் அனைத்தையும் சாதிக்க முடியும், எத்தனை முறை கபடியை விட்டு விலகிச் சென்றாலும் என்னைத் திருப்பி திருப்பி இந்த கபடி என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நாட்டின் ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவை" - நடிகை நயன்தாரா!