சென்னை:தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன 17) காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக காணும் பொங்கல் அன்று மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்வது வழக்கம். அந்த வகையில் இன்று சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு தகுந்தவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயினட்- வாலாஜா பாயின்ட் - அண்ணாசாலை பெரியார் சிலை - அண்ணாசிலை வெல்லிங்டன் பாயின்ட் - ஸ்பென்சர் சந்திப்பு - பட்டுளாஸ் சாலை - மணிக்கூண்டு G.R.H பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை செல்ல வேண்டும்.
அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை செல்ல வேண்டும். பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படும்.