இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இன்று (மே.25) வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கரோனா கொடுந்தொற்று அதன் இரண்டாம் அலை வீச்சினை முழு மூச்சாகக் காட்டி மக்களின் உயிர் பறிக்கும் அவலம் தொடருவது ஒருபுறம். மற்றொருபுறம் கரோனா தொற்றின் காரணமாக கண் பார்வை பாதிக்கப்படும் கரும்பூஞ்சை நோயும் பலருக்கு வந்து மக்கள் அவதியும், பீதியும் கொள்வது மேலும் துன்பத்தை அதிகரிக்கவே செய்யும் அவலமாகும்.
அவரவர் பணிகளை கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் ஆற்றி வருகின்றனர்!
தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக அமருவதற்கு முன்பிருந்தே, முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே மு.க.ஸ்டாலின் தனது அயராத பணியை புயல் வேகத்தில் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அவரது அமைச்சரவையினரும், அலுவர்களும், களப் பணியாளர்களாக இந்தப் ‘போரில்’ ஈடுபட்டுள்ள உயிர் பற்றிக் கவலைப்படாது உழைக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும், காவல் துறையினரும் தூய்மைத் தொழிலாளத் தோழர்களும் அவரவர் பங்களிப்பை மிகுந்த கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் ஆற்றி வருகின்றனர்.
ஆனால், கரோனாவைக் கட்டுப்படுத்தித் தடுக்க முக்கிய கருவியான தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு அனுப்புவதில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, இதில் அரசியல் பார்வையுடன் நடந்துகொண்டுள்ளது என்ற கருத்து பரவலாகவும், உலகளாவிய நிலையிலும், ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை சரிவர இல்லை என்றும் விமர்சிக்கும் நிலையுமே உள்ளது.
தடுப்பூசிகளை உடனுக்குடன் விநியோகம் செய்திருந்தால்...
ஒன்றிய அரசு தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பிற்கு ஏற்ப முன்னுரிமை அளித்து, தடுப்பூசிகளை உடனுக்குடன் விநியோகம் செய்திருந்தால், அமெரிக்காவைப் போல் கரோனாவைத் தடுக்க, கட்டுப்படுத்த இரண்டாம் அலையின் வீச்சை எதிர்கொள்ள பெரிதும் பயன்பட்டிருக்கும்.
முதலில் தன்னிடத்திலேயே அந்த அதிகாரத்தை வைத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி, எல்லோருக்கும் இலவசமாக ஊசி போடுவதை ஒரு தீவிரமான நடவடிக்கையாக ஆக்கியிருந்தால், இந்தக் குழப்பமும் மயக்கமும் இருக்காது.
தடுப்பூசிகளை அனுப்புவதில் ஏனோ பாரபட்சம்?