சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நேற்று (2.12.2022) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், நான் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறேன். அதுதான் என்னுடைய முதல் சிறை அனுபவம், அப்போது எனக்கு 23 வயது. எனக்கு முன்னால், ஆசிரியர் அவர்களும் மற்ற தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.
நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட அன்று, அங்கிருக்கக்கூடிய காவலர்களால் குண்டாந்தடியால் பலமாகத் தாக்கப்படுகிறேன்.
அப்போது என்மீது விழுந்த பெரும்பாலான அடிகளை, தன் உடம்பிலே தாங்கியவர் மறைந்த அண்ணன் சிட்டிபாபு அவர்கள். சிட்டிபாபு அவர்கள் மட்டுமல்ல, அண்ணன் ஆசிரியர் அவர்களும்தான், இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடி தாங்க உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்பதை அறியாத நிலையில் இருந்தவன் நான்.
அப்போது என் மீது விழுந்த அடியை தாங்கி, அதன்பிறகு மனதைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர். தன்னுயிரையும் காத்து என்னுயிரையும் காத்த கருப்புச் சட்டைக்காரர்தான் நம்முடைய ஆசிரியர்.
அதேபோல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது - இந்த ஆட்சி மீது அரசியல் எதிரிகள் விமர்சன தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு முன்னால் அதனைத் தடுக்கக்கூடிய கேடயமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர்.
எதிரிகள் மீது கொள்கை அம்பு பாய்ச்சும் சொல் வீச்சுக்காரராக செயல்படுபவர்தான் நம்முடைய ஆசிரியர். தினந்தோறும் அவர் விடும் அறிக்கைகள் மூலமாக, நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் அத்தனையையும் நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.
அண்ணன் வைகோ அவர்களும், நம்முடைய திருமா அவர்களும் சொன்னார்கள், தமிழக முதல்வருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும், இருக்கிறார், இருப்பார் என்று சொன்னார்கள். அதுதான் என்னை இந்த அளவிற்கு உற்சாகத்தை, ஊக்கத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.
நம்முடைய தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு திக்கற்ற நிலையில் இருந்த நேரத்தில் தைரியத்தை, தெம்பை ஊட்டி இன்றைக்கு திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சி ஏற்படுத்தித் தந்தவர் நம்முடைய ஆசிரியர். நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சுயமரியாதைச் சுடரொளி காட்டி வழிகாட்டுபவராக நம்முடைய ஆசிரியர் செயல்பட்டு வருகிறார்கள்.
கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், பத்து வயது சிறுவன் வீரமணி பேசுகிறார். அதனைப் பார்த்த பேரறிஞர் அண்ணா அடுத்துப் பேசும் போது சொல்கிறார்...''இப்போது பேசிய சிறுவன் காதிலே குண்டலம் அணிந்திருந்தால், ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தன் என்று சொல்லி இருப்பார்கள்.
அது ஞானப்பால். ஆனால் இந்தச் சிறுவன் அருந்தியது பகுத்தறிவுப்பால்" என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார்கள். அத்தகைய பகுத்தறிவுப் பால் அருந்திய காரணத்தால் 90 வயதிலும் இளமையோடும், கொள்கைப் பிடிப்போடும் இருக்கிறார் நம்முடைய ஆசிரியர் .
10 வயதில் கடலூரில் மேடை ஏறினார்.
11 வயதில் சேலம் மாநாட்டில் உரையாற்றினார்.
12 வயதில் நாகை பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்குகிறார்.
13 வயதில் திருத்துறைப்பூண்டியில் கழகக் கொடியை ஏற்றுகிறார்.
14 வயதில் கடலூரில் இவர் பேசிக் கொண்டிருந்தபோது சவுக்கு கட்டை வீசப்பட்டது.
16 வயதில் அண்ணா அவர்களிடம் தூது போனார்.
18 வயதில் கழகத்தின் இளம் பேச்சாளி என்று அழைக்கப்பட்டார்.
20 வயதில் இவரது கல்லூரிப் படிப்புக்காக நாடகம் நடத்தி நிதி தருகிறார் எம்.ஆர்.ராதா அவர்கள்.
25 வயதில் அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்துக்கான ஷரத்தை எழுதித் தருகிறார்.
28 வயதில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்
30 வயதில் விடுதலை ஆசிரியர்
- இப்படியே நான் சொல்லிக் கொண்டிருந்தால் விடிந்துவிடும். இத்தகைய விடிவெள்ளிதான் நம்முடைய ஆசிரியர் வீரமணி .
தலைவர், போராட்டக்காரர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், சட்ட வல்லுநர், கல்வித் தந்தை முக்கியவத்துவம் வாய்ந்திருக்கக்கூடிய தலைசிறந்த நிர்வாகி தொடக்க காலத்தில் இசைமுரசு நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து ஒரு மேடையில் பாடலும் பாடி இருக்கிறார். 1945-ஆம் ஆண்டில் மட்டுமல்ல, இந்த 2022-ஆம் ஆண்டிலும் போர்க்களம் நோக்கிச் செல்வதற்குத் தயாராக இருப்பவர்தான் நம்முடைய ஆசிரியர் .
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை நாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம் ஆளுநருக்கு. இத்தனை நாள் கழித்து ஆளுநர் அதற்கான ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் கண்டித்து நேற்றும் போர்க்களம் கொண்டிருக்கிறார். "நாளை நமது பிறந்த நாளாச்சே! அது முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கவில்லை. நான் கேள்விப்பட்டேன், தம்பி அன்பு அவர்கள், 'இரண்டு நாட்கள் ஆகட்டுமே' பொறுத்து செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்.