இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டில் பொருளாதாரமோ முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டு திணறும் நிலை! இந்த வேதனைமிக்க சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டப்படி, மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களும், உரிமைகளும் பறிக்கப்படும் கொடுமையும், கரோனா கோரத்தாண்டவத்தில் மற்றொரு புறம் மத்திய அரசால் அரங்கேறிக் கொண்டுள்ளது.
பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளது என்பதே மறந்து போகும் நிலையில், இந்த கரோனா காலத்தில் மத்திய அரசே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஆணை போடுவது ஒருபுறம்; மறுபுறத்தில் மாநிலங்களுக்குரிய நிதி உதவிகளைக்கூட போதிய அளவில்கூட தராமல், ஏன், ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவைத் தொகைகளைக்கூடத் தராமல், மாநில அரசுகள் மத்திய அரசை நோக்கி கை பிசைந்து, வாய் பிளந்து நிற்கும் அவல நிலைதான் உள்ளது.
மாநில அரசுகளின் உரிமையை அப்பட்டமாகப் பறித்து, மின்சாரத்துறையையே தனியார் மயமாக்கி, ஏழை விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்தையும் பறிக்கும் நோக்கில், புதிய மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை இந்த கரோனா நெருக்கடியிலும் கொணர்ந்திருப்பதை, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்த்து அறிக்கை விட்ட பிறகுதான், ஏதோ மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் டில்லிக்குக் கடிதம் எழுதி, தள்ளி வைக்கச் சொல்லுகிறார்.
மேலும் கைவிடுங்கள் என்று வற்புறுத்திச் சொல்லும் துணிவு ஏனோ அங்கு வரவில்லை! மாநில அதிகாரங்கள் இப்படி ‘‘கரோனா கொள்ளையாக’’ பறிபோவதைத் தடுக்கவே தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் - நிலைமைகள் ஓரளவு சீரடைந்த நிலையும், உரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கை - அரசமைப்புச் சட்ட உரிமைகளைக் காப்பாற்ற வழியும் செய்யவேண்டிய பொறுப்பில் உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பில்லாத மாவட்டமான திருப்பூர்!