சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் என்.நன்மாறன் உடல் நலக் குறைவால் மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (அக்.28) காலமானார். அவருக்கு வயது 74. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தோழர் என். நன்மாறன் இளம்வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் கடைசி வரை கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட அவர் நீண்டகாலம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டார். இரண்டு முறை சட்டப்பேரவைக்கு மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.
தமிழ்நாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் என்.நன்மாறன் அந்த அமைப்பின் மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழ்நாட்டில் கிராமம் கிராமமாகச் சென்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வாலிபர் சங்கத்தில் இணைத்தவர்.