கோடை காலத்தில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பத்தைத் தணிக்க இளநீர் விற்பனை செய்வோர் தள்ளு வண்டிகளில் இருப்பதைக் காண முடியும். தற்போது, கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவால், கொளுத்தும் வெயிலில், கால் நோக நடந்து மக்களின் தாகம் தீர்க்க கொண்டு வரும் இளநீர் வியாபாரிகளின் கதை கண்ணீர் விட்டு அழுகக் கூடிய நிலைக்கு மாறிவிட்டது. முன்பு போல் மழையும் இல்லாததால் இளநீர் வரத்தும் குறைந்துகொண்டே இருக்கிறது. அத்தகைய சூழலிலும் மக்களின் சூட்டைத் தணிக்க இளநீர் வியாபாரம் நடப்பதுண்டு. ஆனால், தற்போது இளநீர் இருக்கிறது, குடிக்க மக்கள் தான் இல்லை. வெயிலில் வெந்து வாடுவது இளநீர் மட்டும் அல்ல இளநீர் வியாபாரிகளும் தான்.