சென்னை: தொழில் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் குழுவின் அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
கடந்த 2020-21 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
அதேபோல பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை
இந்நிலையை சரி செய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில், ஜூன் 15ஆம் தேதி ஒரு ஆணையத்தை அமைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த ஆணையம் தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையிலான ஆணையத்தின் முதல் கூட்டம், ஜூன் 18ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்ந்துள்ள விவரங்களை அந்தத் துறையினர் அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியிருந்தார்.