சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீதி நிர்வாகம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்தார். பின்னர் அவர் நீதி நிர்வாகத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் பின் வருமாரு,
1. திருநெல்வேலி மாவட்டத்தில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 கீழ் ஏற்படும் வழக்குகளை விசாரிப்பதற்காக திருநெல்வேலியில் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
2. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 12 புதிய பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
3. விழுப்புரம் மாவட்டம், வானூரில் தற்போது இயங்கி வரும் மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை பிரித்து தனியாக ஒரு மாவட்ட உரிமை இயல் நீதிமன்றமும் ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் அமைக்கப்படும்.
4. வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.
5. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டடத்தின் முதல் தளத்தை புதுப்பித்து வணிக நீதிமன்றங்கள் செயல்பட இடம் அளிக்கப்படும்.
6. சேலம் மாவட்டம் மேட்டூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்களில் ரூ.1,66,90,112 செலவினத்தில் மின் தூக்கி வசதி ஏற்படுத்தப்படும்.
7. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற கட்டடத்திற்கு மாற்று திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையிலான மின்தூக்கி வசதி ரூ.44,06,000 செலவினத்தில் கட்டமைக்கப்படும்.