தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! - kancheepuram news

YouTuber TTF Vasan case: காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

YouTuber TTF Vasan on bike accident issue
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 6:57 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் என்ற பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டியபோது விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து, கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது டிடிஎஃப் வாசன் கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்றக் காவல் நேற்று முடிவடைந்த நிலையில், ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2இல் இரண்டு முறை ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு நீதிபதி ஜாமீன் அளிக்க மறுத்து, ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கேட்டு, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசனுடைய வழக்கறிஞர்கள் மனு அளித்திருந்தார். ஆனால் திடீரென ஜாமீன் மனுவானது நேற்று திரும்பப் பெறப்பட்டது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளதால், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் வாபஸ் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், டிடிஎஃப் வாசனுடைய நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1இல் டிடிஎஃப் வாசனை போலீசார் ஆஜர்படுத்த இருந்தனர். ஆனால் வீடியோ கான்பிரன்ஸிங் மூலமாக டிடிஎஃப் வாசனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு, வருகிற அக்டோபர் 16ஆம் தேதி வரை, அதாவது மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: ரூ.10 கோடி நஷ்ட ஈடு; பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details