சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் மிகிரன் என்பவர், 2006ஆம் ஆணடு சூப்பர்வைசராக நியமிக்கப்பட்டு , 2015ஆம் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டார். இந்த பணிமாற்றம் தொடர்பான உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறைப்படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதோடு சூப்பர்வைசர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகளான பிறகும் பணி நியமனம், பதவி உயர்வுக்கான விதிகள் வகுக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. அரசியல் சட்ட விதிகளின்படி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது.