சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தனது மனைவி மற்றும் மகளுடன் வடபழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது 150 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் செல்வதற்காக பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அங்கிருந்த பெண் ஊழியர், 50 ரூபாய்க்கான 2 டிக்கெட்டுகளையும், 5 ரூபாய் டிக்கெட் ஒன்றையும் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதால் மீண்டும் 50 ரூபாய் டிக்கெட் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சாமி தரிசனம் முடித்த நீதிபதி, தன்னை யார் என அறிமுகம் செய்யாமல் கோயில் அலுவலகத்தில் புகார் அளிக்க சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி எண் அல்லது பொது புகார் எண்ணை வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், ‘நீ யார்? உனக்கு ஏன் அதெல்லாம் தர வேண்டும்’ என கேட்டுள்ளனர்.
உடனடியாக நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொண்ட நீதிபதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னை நீதிபதி என அறிமுகம் செய்து கொண்ட அவர், புகாரை பதிவு செய்ய நீதிமன்ற அறையில் தன்னை கோயில் செயல் அலுவலர் சந்திக்க வேண்டும் என்று பதிவாளர் மூலம் அறிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி அளித்துள்ள புகாரில், “சம்பந்தப்பட்ட 5 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் அலுவலர் மீது கண்காணிப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தி, குறைபாடுகள் இருப்பின் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி என்னிடம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘தாயிற் சிறந்த கோயில் இல்லை’ - தாயின் ஆசையை நிறைவேற்றும் தியாகமகன்