சென்னை: முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலி வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அண்ணாமலை போலி சிங்கம்; வீரமாகப் பேசிவிட்டு இப்போது பம்முகிறார் என ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி மதன் ரவிச்சந்திரன் 40 நிமிட ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
மதன் ரவிச்சந்திரனின் தன்னிலை விளக்கம்:
முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தொடர்பான காணொலியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் யு-ட்யூப் சேனல் முடக்கம் செய்யப்பட்டு, அவர் பாஜகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு தன்னிலை விளக்கத்தை மதன் ரவிச்சந்திரன் ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.
போலி சிங்கம் அண்ணாமலை:
அதில், 'தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தைரியம் இல்லாமல், காணொலியை வெளியிடக் கூறியது அண்ணாமலை தான்' என மதன் ரவிச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அண்ணாமலை சிங்கம் அல்ல; போலி சிங்கம் என இன்று (ஆக.26) வெளியிட்டுள்ள ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையிடம் 3 முறை கே.டி.ராகவனின் காணொலியைக் காட்டி நடவடிக்கை எடுக்கக் கூறியதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
'ஒருவரின் 40 வருட அரசியலை அறுத்து எறியப் போகிறீர்கள்' என்று அண்ணாமலை கூறியது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.