சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராகப் பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல், நீதிமன்றத்தில் தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, பத்திரிகையாளர் சேகராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரர் உண்மையான பத்திரிகையாளர்தானா எனக் கேள்வி எழுப்பி வழக்கை ஒத்திவைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் எத்தனை செய்தியாளர் சங்கங்கள் உள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பி போலி செய்தியாளர்களைக் களைய வேண்டும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், உண்மையான பத்திரிகையாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்; போலி பத்திரிகையாளர்கள் அனைத்துப் பலன்களையும் அடைந்து வருகின்றனர் என்றும் தமிழ்நாட்டில் உள்ள போலி பத்திரிகைச் சங்கங்களைக் கண்டறிந்து அரசு நீக்க வேண்டும் என்றும் கூறினர்.