சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகி அன்பழகன் நந்தனத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தனக்கான ஸ்டாலில் தமிழ்நாடு அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக புத்தகத் திருவிழாவை நடத்தும் பபாசி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் அன்பழகனுக்கும் பாபாசி நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை அன்பழகனை சைதாப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். அன்பழகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமமுக பொதுசெயலாளர் தினகரன், திமுக தலைவர் ஸ்டாலின், ஜவாஹிருல்லா, வைகோ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை சரகத்திற்கான நீதிபதி கவுதமன் வீட்டில் அன்பழகன் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு நீதிமன்ற காவல் உத்தரவினை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். இதன் பின்னர் அன்பழகனை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நகரின் பல பகுதிகளிலும் சுற்றி வந்தனர்.