கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி களமிறக்கப்பட்டார். இவர் அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று காலை முதல் மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த ஜோதிமணி, தம்பிதுரையைக் காட்டிலும் மூன்று லட்சத்து 6,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளார்.
அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்த ஜோதிமணி
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பெரியதிருமங்கலம் என்ற குக்கிராமத்தில் சென்னிமலை - முத்துலட்சுமி தம்பதிக்கு ஜோதிமணி பிறந்தார். அரசியல் பின்னணி இல்லாத எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை, எம்.பில் படிப்பையும் நிறைவு செய்தார்.
கல்லூரி காலம் முதல் தன்னை அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்ட ஜோதிமணி, அரவக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.எஸ்.சதாசிவத்தைக் குருவாக ஏற்றுக்கொண்டு, பொதுவாழ்க்கையில் கால்பதித்தார். 1996ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கூடலூர் மேற்குப் பகுதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்வானதே இவரது அரசியல் பயணத்தின் முதல் வெற்றி. தொடர் செயல்பாடுகளால் 2001இல் மீண்டும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரானார்.