தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடசென்னை கள நிலவரம், காவலர்களை ஊக்குவிக்கவே சைக்கிள் பயணம் - இணை ஆணையர் ரம்யா பாரதி பேட்டி - வடசென்னை இணை ஆணையர் ரம்யா பாரதி பேட்டி

வடசென்னையின் காவல்துறை இணை ஆணையாளராக பணியாற்றிவரும் ரம்யா பாரதி கடந்த சில நாள்களுக்கு முன்பு வடசென்னை காவல்துறை மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென்று சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ரம்யா பாரதி
ரம்யா பாரதி

By

Published : Mar 26, 2022, 10:27 PM IST

Updated : Mar 28, 2022, 4:13 PM IST

சென்னை:வடசென்னை மண்டலத்தின் பூக்கடை சரகத்திற்கு உள்பட்ட வாலாஜா சந்திப்பு, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, எஸ்பிளனேடு காவல் நிலைய சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, குறளகம் சந்திப்பு, என்எஸ்சி போஸ் சாலை, வால்டாக்ஸ் ரோடு மற்றும் வண்ணாரப்பேட்டை சரகத்திற்கு உள்பட்ட மூலகொத்தளம் சந்திப்பு, மீனாம்பாள் நகர் மேம்பாலம், ஆர்கே நகர் எண்ணூர் விரைவு சாலை, வைத்தியநாதன் பாலம், திருவெற்றியூர் நெடுஞ்சாலை என சுமார் 9 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் வடசென்னையின் பகுதிகள் குறித்து இதுவரை அறிந்ததில்லை. வடசென்னையில் கள நிலவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும், மேலும் இரவு நேரங்களில் பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டதாக இணை ஆணையாளர் ரம்யா பாரதி தெரிவித்தார்.

ஆய்வு பணிக்கு சைக்கிள் ஏன்?

இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, "காவல் பணிகளில் இரவு பணி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். யார் எங்கு பணியாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு ஒவ்வொரு நாள் இரவு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் திடீர் ஆய்வு என்பது சாதாரண விஷயம்தான். இந்த ஆய்வின் மூலம் காவலர்களின் இரவு பணிகள் குறித்தும், இரவு நேரத்தில் பொதுமக்களின் நடமாட்டம் குறித்தும் தெரிந்துகொள்ள முடிந்தது.

இணை ஆணையர் ரம்யா பாரதி சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு

நான் என்னுடைய வாகனத்தில் இரவு சோதனை செய்திருந்தால் அனைவருக்கும் இந்த அதிகாரி தான் செல்கிறார் எனத் தெரியும். இதன் மூலம் இரவு பணியின் உண்மைத்தன்மை தெரிவது சற்று குறைவாகவே இருக்கும். அதற்காகவே இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

பொதுவாக குற்றச்சம்பவங்கள் நடைபெறும் நேரம் 2 மணி முதல் 4 மணி வரை தான். மேலும் மனித உடலுக்கு ஓய்வு தேவைப்படும் நேரமும் இந்த நேரம்தான். இந்த நேரத்தில் பணியாற்ற தயாராக உள்ளோம் என்பதை மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டேன்.

இந்த சைக்கிள் பயணத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு சூழ்நிலையும் அமையவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன என்றால் ஒவ்வொரு இரண்டு தெருக்களுக்கும் இடையில் ரோந்து வாகனங்களை பார்க்க முடிந்தது. இதன் மூலம் பிரச்சினைகள் என்று வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல் துறையினரால் சென்று சேரக்கூடிய நிலையில் இரவு பணி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் வாழ்த்து

நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் தொடர்ந்து இரவு பணியில் இருந்த காவலர்கள் இணை ஆணையாளர் வருகிறார் என்ற ஆச்சரியத்திலே எங்களை பார்த்தனர். ஒரு உயர் அதிகாரி இதுபோன்று செய்வதன் மூலம் பணியில் இருக்கும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். மேலும் கீழ்மட்டத்தில் இருக்கும் காவலர்கள் உயரதிகாரிகளுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் இந்த பயணத்தின் போது அனைத்து காவலர்களும் கலந்துரையாடி காவலர்களின் இரவு பணிகள் மற்றும் வடசென்னை பகுதியின் களநிலவரங்களை நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருந்தது.

திடீரென்று இந்த பயணத்தை திட்டமிட்டதால் என் பயணம் குறித்து நான் காவல்துறையில் யாருக்கும் தெரிவிக்கவில்லை. பயணம் முடியும் போது தேவை ஏற்பட்டதால் அனைவருக்கும் பயணம் குறித்து தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் அனைத்து பகுதியிலும் இரவு நேர செயல்பாடுகளை அறிந்து கொள்ள இந்த பயணம் ஏதுவாக இருந்தது.

நான் என்னுடைய வேலையை செய்ததற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருப்பது ஒரு பெண் அதிகாரியாக எனக்கு மட்டுமில்லாமல் சென்னை காவல்துறையில் பணியாற்றும் அனைத்து பெண் காவலர்களையும் ஊக்குவிக்கும். தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து சென்னை காவல்துறை பணியாற்றும்" என அவர் தெரிவித்தார்.

இதோடு நிற்காது, தொடரும்

அவர் மேலும் கூறுகையில், "இந்த பயணத்தின் போது அதிக அளவில் ஆட்டோ டிரைவர்களையும், டீ கடைகளையும் பார்க்க முடிந்தது. அவர்களும் எங்களை யார் என்று தெரியாமல் சந்தேகத்துடனே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வேகமாக சென்று கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மடக்கிப் பிடிக்கும் படி என்னுடைய உதவியாளரிடம் தெரிவித்தேன்.

அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்களை வேறு ஒரு இடத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் எங்களுக்கு ஏதோ பிரச்சனை என கருதி என்ன பிரச்சினை என்று எங்களிடம் கேட்டனர். இரவு நேரத்தில் காவல்துறையினர் என்பதை தாண்டி எங்களுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என ஆட்டோ டிரைவர்கள் விசாரிக்கும் நிகழ்வுகளையும் காணமுடிந்தது.

இதற்கு முன் தான் பணியாற்றிய ஓசூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். தொடர்ந்து வடசென்னையின் களநிலவரங்களை தெரிந்து கொள்ளவும், காவலர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: துபாயில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,600 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Last Updated : Mar 28, 2022, 4:13 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details