அண்ணாமலை ஒருவர் போதும் பாஜகவிற்கு சமாதி கட்ட!:புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சென்னை:தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் "விடியல் 2023" வேலை வாய்ப்பு முகாம் அம்பத்தூர் சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நேற்று (ஜூன் 18) நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றனர்.
இதில், 1800 மாணவர்கள் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்த மாணவ மாணவியர்கள் வருகை தந்தனர். சுமார் 10,000+ காலிப் பணியிடங்களுக்கு 2 முதல் 15 லட்சம் வரை சம்பளத்தொகுப்பு அளிக்கப்பட்டது.
வேலை தேடுபவர்களுக்கும், +2 முடித்த மாணவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு தரக்கூடிய நிறுவனங்களும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர்.மேலும், ஐடிஐ தொழிற்பயிற்சி, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
மகேந்திரா, ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட், ஏபிடி மாருதி, டெல்பி டிவிஎஸ், ஆர்.பீ.ஏஸ் இந்தியா, ரிலையன்ஸ், ஸ்ரீராம் சிட் பண்ட், சவீதா பொறியியல் கல்லூரி, மெட்பிளஸ், எக்விட்டாஸ், ஆதித்யா பிர்லா, எச்டிஎப்சி, பஜாஜ் அலையன்ஸ், எல்ஐசி, யமஹா, மியூசிக்கல், இந்தியா பிஸ்டன், காமாட்சி டிஎம்டி பார்ஸ், ஜெப்ரானிக்ஸ், கோத்ரேஜ், ராயல் என்பீல்ட், சுந்தரம் பிரேக்ஸ் இந்தியா உள்ளிட்ட 150 இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தனர். உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேருக்கு வேலைவாய்ப்பு கடிதத்தை வழங்கி புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர், 'தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக சமீப நாட்களில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும் வெளிநாடு சென்று வேலை வாய்ப்பு உருவாக்கியும் தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கையை வேகமாக எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கூட மின்சாரத்தால் இயங்குகின்ற பேட்டரி தொழிற்சாலை மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஐடி தொழிற்சாலைகள் அதிகமாக வருகின்றன. அது மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாக்குகின்ற பணியை முதலமைச்சர் அவர்கள் இணைந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சவாலாக இருக்கிறது. ஏற்கனவே நாட்டில் 19% பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். கரோனா காலத்தில் 2021 முதல் 2023 வரை சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது போன்ற மூடப்பட்ட தொழிற்சாலைகள் படிப்படியாக திறக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு பெரிய தொழிற்சாலைகளை கவனம் செலுத்துகிறது.
சிறிய தொழிற்சாலைகளைக் கண்டு கொள்வதில்லை. நாட்டிலே ஆட்டோமொபைல் சார்ந்த பொருட்களை 25 % ஏற்றுமதி செய்கின்ற பொருட்கள் உற்பத்தி செய்வது சிறு தொழிற்சாலைகள் தான்.பெரிய தொழிற்சாலைகளில் குறிப்பாக அனைத்தும் ஆட்டோமேஷன் பணி இருக்கும் காரணத்தால் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. சிறு சிறு தொழிற்சாலைகள் இருந்தால்தான் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்க முடியும். தற்பொழுது நாட்டில் 27% திற்கும் மேல் வேலை இல்லாதவர்கள் இருக்கிறார்கள் 19%த்திலிருந்து 27% ஆக உயர்ந்திருக்கிறது.
இதனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழ் இருப்பவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு தமிழகத்தைப் போல் மற்ற மாநிலங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். குறிப்பாக, பெரிய பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர கவனம் செலுத்துகிறார்களே
தவிர சிறு தொழிற்சாலையின் மீது கவனம் செலுத்துவதில்லை.
வங்கிகள் கூட சிறு,குறு தொழிற்சாலைகளுக்கு தங்கள் கதவுகளை திறப்பதில்லை. அது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகள் உருவாக்குகின்ற தொழிற்சாலைக்கும் ஏற்றுமதி செய்கின்ற தொழிற்சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அமலாக்கத்துறை செய்த செந்தில் பாலாஜி கைது பற்றி: கடந்த 10 நாட்களுக்கு முன் கரூர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதற்குப் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழகம் வந்தார். பல கூட்டங்களில் கலந்து கொண்டார். அவர் திரும்பிச்சென்ற பிறகு அமலாக்கப்பிரிவுத்துறை சோதனை நடத்துகின்றன.
2016ல் தொடுக்கப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் சோதனை செய்ததையடுத்து 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜிக்குப் பல தொல்லைகளை கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவரைக் கைது செய்தார்கள். உள்துறை அமைச்சர் வந்து சென்ற பிறகு கைது நடவடிக்கை செய்யப்படுகிறது.
இது பழிவாங்கும் நடவடிக்கை. திட்டமிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய நிர்வாகத்தை முட்டுக்கட்டை போட வேண்டும் என்று தொடர்ந்து ஆளுநர் ரவி இது போன்ற வேலையை செய்து வருகிறார்.
அவர் யார் சொல்லி செய்கிறார் மோடி-அமித்ஷா சொல்லி செய்கிறார். பாரதிய ஜனதா எக்காலத்திலும் தமிழ்நாட்டில் தலைவைக்க முடியாது. அண்ணாமலை ஒருவர் போதும் பாரதிய ஜனதா கட்சிக்கு சமாதி கட்ட. அந்த நிலைமை தற்பொழுது உருவாகி வருகிறது.செந்தில் பாலாஜி அவர்கள் நீதிமன்றக் காவலில் இருந்து விசாரணைக்கு கேட்டிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கு யார் பொறுப்பு, யார் பதில் சொல்வது அமலாக்கத்துறை தான் பொறுப்பு, மோடி அவர்கள் தான் பொறுப்பு, அமித்ஷா அவர்கள் தான் பொறுப்பு.
2024 இதற்கெல்லாம் முடிவு வரும். அதற்கு முக்கியக் காரணமாக தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதனால் தமிழக முதலமைச்சர் பெயரில் கோபம். புதுச்சேரியில் கிரண்பேடி அவர்களை ஆளுநராக நியமித்து ஐந்தாண்டும் தொல்லை கொடுத்து என்னை நடுரோட்டில் போராட வைத்தார்களோ அதே வேலையை தமிழ்நாடு முதலமைச்சருக்கும் செய்ய முயற்சி செய்கிறார்கள். இது பாஜகவிற்கு கைவந்த கலை.
இதுவே பாஜக ஆளும் மாநிலத்தில் இது போன்ற ஒரே ஒருவரை கூட விசாரணை செய்யவில்லை. ஆனால், பாரதியா ஜனதா ஆளும் அசாம் மாநில முதலமைச்சர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் மீது ஊழல் வழக்கு உள்ளது. குஜராத் முதலமைச்சர் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பொம்மை அரசின் 40% கமிஷன் ஊழல் அரசு என்று காங்கிரஸ் சார்பில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இது மோடி அரசு திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை செய்து வருகிறது. அதுதான் செந்தில் பாலாஜிக்கு செய்தவேலை இது முறியடிக்கப்படும்.திமுகவின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருக்கும்போது சில ஆதாரத்தின் அடிப்படையில் பேசி இருக்கலாம். அந்த ஆதாரங்கள் தவறாக கூட இருக்கலாம். எனவே, இதைப் பற்றி பின்னர் பேசுகிறேன்’ என செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் பாதியிலேயே சென்று விட்டார், புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.
இதையும் படிங்க:நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? - எடப்பாடி பழனிசாமி ரியாக்ஷன் என்ன?