சென்னை:டெல்லிஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவரான நாசர் முகமது மொஹிதீன் தன் மேற்பார்வையாளரான ஷைலஜா சிங் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து ஜே.என்.யூ. பல்கலைக்கழகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது, இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் தீர விசாரித்த பின், ஷைலஜா சிங்கை மாற்ற வாய்ப்பில்லை என்றும், நாசருக்கு வேறு மேற்பார்வையாளர் வழங்க முடியாது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது. மேலும், மாணவர் நாசரின் கடிதத்தில், அவர் பட்டப்படிப்பைத் தொடர வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதை அடுத்து, ஆராய்ச்சி படிப்பைத் தொடர முடியாத நிலையில், நாசருக்கு சேர வேண்டிய சம்பளம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு பல்வேறு தரப்புகளின் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த நிலையில், இன்று (அக்.11) ஜே.என்.யூ தமிழ் மாணவர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜே.என்.யூ. தமிழ் மாணவர் சங்கம் கண்டனம்: இதுகுறித்து ஜே.என்.யூ. தமிழ் மாணவர் சங்கம் தெரிவித்ததாவது, “ஜே.என்.பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆய்வு மாணவர் நாசர் முகமது முகைதீன் கடந்த பிப்ரவரி மாதம் டெப்லாஸ்-இல் நடத்தப்பட்ட வன்முறையில் ஏ.பி.வி.பி. கள்வர்களால் தாக்கப்பட்டார்.
பெரியார், மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் உடைக்கப்பட்டு மாணவர் சங்க அலுவலகம் அவர்களால் தாக்கப்பட்டது. இதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்தன. மேலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வந்து கண்டனம் தெரிவித்து, பின் துணைவேந்தரையும் சந்தித்துப் புகாரளித்து விட்டுச் சென்றனர்.