சென்னை:இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா மேடையில் பேசுகையில், “நல்ல வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்த படத்தை மக்கள் கொண்டாடினார்கள். இப்படியொரு வரவேற்பு படத்திற்கு கிடைத்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. ஒரு எமோஷனல் சீனுக்கு ரசிகர்கள் கை தட்டும் அளவுக்கு வந்துவிட்டார்கள். தரமான படைப்புக்கு தரமான வெற்றி கிடைத்தது.
வார நாட்களில் தியேட்டர்களில் ரசிகர்கள் அதிகமாக வந்தனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் எங்கள் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடினர். கார்த்திக் சுப்புராஜை பொறுத்தவரை நாம் பேசுவதை விட நம் படம் பேச வேண்டும் என்று நினைப்பவர். இன்று அந்த படம் பேசுகிறது. நன்றியை சொல்வதில் ஸ்டோன் பெஞ்ச் என்றைக்கும் குறைந்ததில்லை. இறைவி படத்தில் நடிகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது அப்படியே தொடர்கிறது. அதை கொடுத்ததும் கார்த்திக் சுப்புராஜ் தான்.
ரஜினிகாந்த், என்னை பாராட்டியது ரொம்ப சந்தோஷம். விஜய் சொன்னதைப் போல, கிட்டத்தட்ட தாவி பிடிப்பதை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்து விட்டார். ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்கு நடுவில் எங்கள் படத்தை பாராட்டி கடிதமாக எழுதினார். நாங்கள் யூனிட்டாக அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
தரமான படங்களை வசூல் ரீதியாக கொடுத்த இயக்குநர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். தலைவர் ரஜினிகாந்த் சொன்னது போல குறிஞ்சி மலர் என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் கிடைத்த சிறந்த நண்பர் லாரன்ஸ் மாஸ்டர்.
மக்களுக்கு எப்போதும் ஒரு வித்தியாசம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படியாக லாரன்ஸ் மாஸ்டர் வித்தியாசமாக நடிக்கிறார். நான் நடிகனாக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால் ரஜினி, என்னை நடிகவேள் என்று புகழ்ந்தது ரொம்ப சந்தோஷம்” என்றார்.