பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி (59), இன்று (அக்.11) சோமங்கலத்திலுள்ள தனது மகள் ரேணுகாதேவியின் வீட்டுக்குச் செல்வதற்காக செம்பரம்பாக்கம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.
நகை திருட்டு
அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் அவரது அருகில் சென்று “மாஸ்க் ஏன் அணியவில்லை, அங்கு அபராதம் விதிக்கிறார்கள், உங்கள் கழுத்து, கையில் அணிந்துள்ள நகைகளைக் கழற்றி கைப்பையில் போட்டுக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளனர்.
வந்தவர்கள் காவல் துறையினர் என நம்பிய அப்பெண்ணும் நகையைக் கழற்றி கைப்பையில் போட்டுள்ளார். பின்னர் ராஜேஷ்வரி பேருந்தில் ஏறி குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இறங்கி பையை பார்த்தபோது நகைகள் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் தன் கவனத்தை திசை திருப்பி அடையாளம் தெரியாத நபர்கள் 10 சவரன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
எச்சரிக்கை
இதுகுறித்து மூதாட்டியின் புகாரின் பேரில் நசரத்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் செய்திக்குறிப்பில், ”கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுதும், அபராதம் விதிக்கும்பொழுதும் காவல் துறையினர் யாரும் பொதுமக்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி கைப்பைக்குள் பத்திரமாக வைத்துச் செல்லுங்கள் என சொல்வது இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்று அங்கு கலவரம் நடைபெறுகிறது என்றும், காவல் துறையினர் கூட்டமாக உள்ளனர் என்றும், எனவே அணிந்திருக்கும் நகைகளை பத்திரமாக பையில் வைக்குமாறு கவனத்தை திசை திருப்பி ஏமாற்றும் நபர்களிடமிருந்தும், பணநோட்டுகள் மற்றும் சில்லறைகளை கீழே போட்டு, பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பொதுமக்கள் வைத்திருக்கும் பணம், நகைகளை ஏமாற்றி பறிக்கும் கும்பலிடமும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இது போன்று சந்தேக நபர்கள் பற்றி தெரிந்தால் பொதுமக்கள் உடனே ’காவலன் App’ அல்லது 100, 112 என்ற அவசர அழைப்பு எண்களில் காவல் துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முந்திரி ஆலை தொழிலாளி கொலை: திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்