சென்னை:தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் பாகம் 2, அகிலன் ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & ஜி.ஜெயராம் வழங்கும், இயக்குநர் அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி - நயன்தாரா இருவரும் தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து 'இறைவன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் உள்ள இப்படம் ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 இந்திய மொழிகளில் தயாராகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அகமது, இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஹாரர் த்ரில்லராக உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் பயங்கரமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்த தனி ஒருவன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் இப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி தற்போது சைரன், தனி ஒருவன் 2, இயக்குனர் ராஜேஷ் படம் என பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது. அதேபோல் இனி வரும் படங்களும் ஜெயம் ரவி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தளபதி 68க்கு லீவு விட்ட வெங்கட் பிரபு முதல் வித்தியாசமான முறையில் புரோமோஷன் செய்த விஜய் ஆண்டனி வரை சினிமா சிதறல்கள்!