சென்னை :தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, 'ஜீனி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இயக்குநர் அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஜீனி'. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்டப் பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் 'ஜீனி', வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25வது படம் என்பதால், மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராவதுடன், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக்ஷன் கலந்த ஃபேண்டஸி படமாக இது உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது படமாகும். கோமாளி, போகன் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இப்படமும் அதே அளவில் பிரமாண்டமான வெற்றியைப் பெறும் என்று ஜெயம்ரவி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.