சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அமைக்கப்பட்ட அறுமுகசாமி ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில் ஜெயலலிதா மரணமடைந்த நேரம், அவரது இறப்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
உரிய சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.. ஜெயலலிதா மயங்கிய பின் எல்லாமே மர்மம் தான்...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் அளித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பது குறித்த பல கேள்விகளையும் விசாரணை ஆணையம் எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்பட வேண்டும் என மருத்துவர் சுமின்சர்மா விளக்கிய பின்னரும் ஏன் ஆஞ்சியோ செய்யப்படவில்லை? சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல தயார் என மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறிய பின்னரும் அது ஏன் நடக்கவில்லை? உள்ளிட்ட கேள்விகள் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளன.
உரிய சிகிச்சைகளை முறையாக செய்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா 2016 செப்டம்பர் மாதம் மயக்கமடைந்த பிறகு எல்லாமே ரகசியமாக உள்ளது எனவும், ஆறுமுகசாமி ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.