மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான என்னையும், என் தம்பி தீபக்கையும் சட்டப்படியான வாரிசாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
எனது அத்தை ஜெயலலிதாவும், பாட்டி சந்தியாவும் போயஸ் கார்டனில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வேதா நிலையத்தில் அவர்களின் இறுதி காலம் வரை வாழ்ந்தனர். பாட்டி சந்தியா இறந்த பிறகு, அவர் எழுதிவைத்த உயிலின்படி அந்த சொத்து முழுவதும் ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எனது மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேதா நிலையத்தை எங்களின் விருப்பத்திற்கு மாறாக ஆர்ஜிதம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நில ஆர்ஜிதம் செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில், அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்க சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதற்கான நாளும், நேரமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுக் கருத்து கேட்பு எதுவும் நடத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கும், சட்டத்திற்கு முரணாகவும் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது. நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு, செட்டில்மென்ட் உரிமை ஆகிய உரிமைகளை சட்டத்துக்கு முரணாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.
சொத்துக்கள் மீது உரிமையுள்ள நபர்களிடம் எந்தக் கருத்தையும் கேட்கவில்லை. வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதால் எந்த குடும்பமும் பாதிக்காது, மறுவாழ்வு மற்றும் செட்டில்மென்ட் தேவையில்லை என்று நில ஆர்ஜித அதிகாரி அறிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பூர்வமான வாரிசுகளான எங்களைக் கேட்காமல், வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் திணறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற அரசு அவசரம் காட்டுகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அதிகாரிகள், மருத்துவர்கள் என 147 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த நேரத்தில் வழக்கில் சம்மந்தப்பட்ட இடத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக அழித்து விடும். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்திற்கும் நாங்கள் தான் உரிமை கோர முடியும்.
இவற்றை எல்லாம் தற்காலிகமாக அரசு தங்கள் வசம் எடுத்துக்கொண்டிருப்பது நியாயமற்றது, சட்ட விரோதமானது. வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சென்னை மாவட்ட ஆட்சியர், நில ஆர்ஜித அதிகாரி எடுத்துவிடக்கூடாது எனக் கோரி தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி மனு அனுப்பினேன். இந்நிலையில், ஜூன் 29ஆம் தேதி உயர் நீதிமன்றம் என்னை ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசாக நியமனம் செய்தும், 6 மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவரது கடன்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், போயஸ் கார்டன் வீட்டை ஆய்வு செய்யக்கூட எனக்கு அலுவலர்கள் அனுமதி தரவில்லை. மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. எனது மூதாதையர்களின் சொத்துக்களை குறிப்பாக நகைகள், உடைகள், பெண்களின் உடைமைகளை அரசு எடுப்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலாகும். எனது தாய்போல் இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
வேதா நிலையத்தில் ஏராளமான மதிப்புமிக்க பொருட்கள், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகள் போன்ற இருக்கும் அனைத்தும் புராதானமானவை. அவை எனது தாத்தாவிற்கு மைசூர் ராயல் பேலஸ் டாக்டர் ஒருவரால் வழங்கப்பட்டவை. அவற்றை ஜெயலலிதா மிக பத்திரமாக பராமரித்து வந்தார். அவற்றைத் தொட யாருக்கும் அனுமதி வழங்கமாட்டார். அப்படிப்பட்ட பொருட்களை அரசு கையகப்படுத்துவது, ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
ஜெய லலிதாவின் உயர் மதிப்புள்ள நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா நிலையத்தை மாற்ற தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை. நாங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 89 விழுக்காட்டினர் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான, சட்டப் பூர்வ வாரிசுகளான நாங்கள் இதற்கு அனுமதிக்கமாட்டோம்.
எனவே, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றும் தென் சென்னை வட்டார வருவாய் அதிகாரி, கடந்த ஜூலை 22ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தீபா தரப்பில் ஆஜராவதற்காக, நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:வேதா நிலையம் அரசுடைமையானது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு