சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலலாளருமான ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கும், சிலைகளுக்கும் அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். கறுப்பு சட்டை அணிந்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள், உறுதிமொழி எடுத்தனர். அப்போது, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைப்போம் என்றார்.
உறுதிமொழியை வாசித்த ஜேசிடி பிரபாகர், “அதிமுக என்கிற பேரியக்கத்தை தோற்றுவித்த புரட்சித் தலைவரும், அதனை முக்கடல் சூழ்ந்த பாரதத்தில் மூன்றாம் பெரும் இயக்கமாக வளர்த்துக் காட்டிய புரட்சித் தலைவி அம்மாவும், இயக்கத்தின் இதயமாக கருதியது கழகமே உலகமென வாழும் தொண்டர்களைத் தான்.
அப்படிப்பட்ட தொண்டர்களின் கருத்துகளுக்கு அந்த மாபெரும் தலைவர்களால் தரப்பட்ட மதிப்பும், முக்கியத்துவமும் இன்று சிலரால் திட்டமிட்டு பறிக்க முயல்வதைத் தொண்டர்கள் துணையோடு முறியடித்து, அதிமுக என்கிற அப்பழுக்கில்லா இயக்கத்தை மிடுக்கு குறையாத எஃகு கோட்டையாக தொடர்ந்து கொண்டு சென்றிட இந்தத் தியாகத் திருநாளில் உளமாற உறுதி ஏற்கிறோம்.
‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்னும் மந்திர மொழியையே தன் வாழ்நாள் பிரகடனமாக அறிவித்து, வாழ்ந்தவர். பெண் இனத்தின் வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சி என்பதை இலக்காகக் கொண்டு ஏழைப் பெண்களுக்கு உதவிடும் நோக்கோடு, ‘மிதி வண்டி வழங்கும் திட்டம்', ‘தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்’, ‘விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்’, ‘பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம்’ உள்ளிட்ட மக்களைக் கவர்ந்த மகத்தான திட்டங்களை எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு ஆளும் திமுக அரசு ரத்து செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு, மீண்டும் அம்மாவின் வழியிலான கருணை மிக்க கழக ஆட்சியை கொண்டு வந்து அந்த மக்கள் நலத் திட்டங்களை எல்லாம் மீண்டும் தொடர்ந்திட இந்நாளில் உறுதி ஏற்கிறோம்.
‘மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி’ அதிமுக கழகத் தொண்டர்களை ஓரணியில் திரட்டி, ஒற்றுமையை பறைசாற்றி, அதன்மூலம் பல வெற்றிகளை ஜெயலலிதா பெற்றுக் கொடுத்தார்கள். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அதிமுகவின் அற்புதமான திட்டங்களுக்கு மூடு விழா போன்ற திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், கட்டணமில்லா கல்வி, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது உள்ளிட்ட திட்டங்களின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, விரைவில் மலர பாடுபடுவோம். மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய், நீட் தேர்வு ரத்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம், முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாய், கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து, மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் என போலியான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் செயல்படுகிறது.
அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாட்டை அமளிக் காடாக மாற்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஆட்சியாளர்களின் திறமையின்மையை மக்களிடம் எடுத்துரைக்கு உறுதி ஏற்கிறோம். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைப்போம் என உறுதி ஏற்கிறோம். 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றிக்கு உழைத்திடுவோம்” என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'எதிரிகளை விரட்டி அடித்து துரோகிகளை தூள் தூளாக்குவோம்' - சபதமிட்ட ஈபிஎஸ்