சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலலாளருமான ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கும், சிலைகளுக்கும் அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்தினர். கருப்பு சட்டை அணிந்து தங்களது துக்கத்தை வெளிபடுத்திய அவர்கள், உறுதிமொழி எடுத்தனர்.
அதில் எடப்பாடி பழனிசாமி, “தனி ஒருவராக சட்டமன்றதுக்குச் சென்று சிங்கமென கர்ஜித்தவர் ஜெயலலிதா. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் நெஞ்சுரம் கொண்ட இரும்பு பெண்மணியாகத் திகழ்ந்தவர், ஜெயலலிதா. ஜெயலலிதாவால் பயிற்றுவிக்கப்பட்ட உடன்பிறப்புகளாகிய நாம், ஜெயலலிதாவுக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடனாக, அதிமுக ஆட்சி மீண்டும் அமைக்க அனைவரும் சபதம் ஏற்க இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும். இந்த நேரத்தில் எதிரிகளை விரட்டி அடித்து, துரோகிகளை தூள் தூளாக்குவோம் என உறுதி ஏற்போம்” என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'மக்களின் வாழ்க்கை முறையை உயர்த்த அல்லும் பகலும் உழைத்தவர் ஜெயலலிதா. அதிமுக சார்பில் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளோம். தொண்டர்களின் எழுச்சியைப் பார்க்கும்போது ஜெயலலிதா வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்கிற நிலையே ஏற்படுகிறது' எனக் கூறினார்.