தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதா இல்லம் இழப்பீட்டு தொகை விவகாரம்: தீபக், தீபா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம்

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்திற்கான இழப்பீட்டு தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வது என தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேதா இல்லம் இழப்பீட்டு தொகை விவகாரம்: தீபக்,தீபா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
வேதா இல்லம் இழப்பீட்டு தொகை விவகாரம்: தீபக்,தீபா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Oct 20, 2020, 1:30 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என மாநில அரசு அறிவித்தது. பின்னர், வேதா இல்ல நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன், கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்திருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சொத்துக்களின் சட்ட வாரிசுகளான தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் அந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்க ஏதுவாக 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகை, வருமான வரி பாக்கி என 68 கோடி ரூபாயை சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தது.

மறைந்த ஜெயலலிதா செலுத்தாமல் இருந்த வருமான வரி பாக்கி 36.9 கோடியும் அதில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வருமான வரி பாக்கியை தங்களிடம் வழங்க உத்தரவிடக்கோரி வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐந்தாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விசாரித்த சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், அரசின் இழப்பீட்டு தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்று ஜெயலலிதாவின் சட்டரீதியான வாரிசுகளான தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறை தரப்பில் நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details