ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், 2021- சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சிறப்பாக களப்பணி ஆற்றுவது தொடர்பாகவும் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜேசிடி பிரபாகரன், கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதல்படி, மாணவச் சமுதாயத்தின் அட்சயப் பாத்திரமாக விளங்கிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் தினத்தை மாணவச் சமுதாயத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது என கழக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.