சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், அதிமுக மாபெரும் இயக்கம். 2021ல் அதிமுகதான் ஆட்சியமைக்கும். அதிமுகவைவிட வலிமை பெற்ற சக்தி எதுவும் இல்லை என்றார்.
கமல் ஹாசனின் பலவீனம்
தொடர்ந்து பேசிய அவர், விஸ்வரூபம் படத்திற்கு தடை வந்தபோது எம்ஜிஆர் குறித்து பேசாத கமல் தற்போது எம்ஜிஆர் குறித்து பேசிவருவது அவரது பலவீனத்தைதான் காட்டுகிறது. எம்ஜிஆர் வாக்குகளை வாங்க நினைத்தால் கானல் நீராகத்தான் போவார்கள். இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காது.
'எம்ஜிஆரை கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதம்'- அமைச்சர் ஜெயக்குமார் தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த எண்ணமும் 2021ல் அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதுதான். கட்சிகள் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம். மூன்றாவது, நான்காவது அணிகூட உருவாகலாம். ஆனால், முதல் அணியாக அதிமுகதான் இருக்கும். பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் கட்சி அதிமுகதான். பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற அடிப்படையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அந்தக்கருத்தைக் கூறியுள்ளார் என்றார்.
மேலும், வேடம் போடவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று கூறிய அவர், திமுகதான் பச்சோந்திபோல் தங்களது நிறத்தை மாற்றிவருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதரத்தை சீரழித்தது திமுகதான் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:’அதிமுக தலைமையில் மெகா கூட்டணி’: அமைச்சர் ஜெயக்குமார்