சென்னை: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ஜெயக்குமார், "சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது, திமுக. தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
அதிமுக செய்த திட்டங்களையும், திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கினையும் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு கிளைக் கழகம், தலைமைக் கழக நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உட்கட்சியில் பிரச்னை இல்லை. ஓபிஎஸ் பற்றியோ, சசிகலா பற்றியோ, டிடிவி தினகரன் பற்றியோ பேசவில்லை. 20 மாத ஆட்சியில் திமுக குடும்பத்துக்கு தான் விடியல் ஏற்பட்டிருக்கிறது.
ஆதி திராவிடர்களுக்கான மத்திய அரசு நிதி 920 கோடியை அரசு செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளது. எம்.ஜி.ஆர் வகுத்த விதிப்படி பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது. ஓபிஎஸ் எப்படி கட்சி நடத்த முடியும். அதனால் கட்சி கொடி, லெட்டர்பேட் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அவருடைய நோட்டீஸ் எடுபடாது.