சென்னை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரன் இன்பநிதி கலந்து கொண்டது விதி மீறிய செயல். திமுக குடும்ப நலனை முதன்மையாக வைத்து செயல்படுகிறது. கோவையில் செம்மொழி மாநாட்டிலும் தமிழ் அறிஞர்கள் பின் வரிசையில் தள்ளப்பட்டு, முன் வரிசையில் அப்போது முதலமைச்சரான கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தான் இருந்தனர். தமிழ் அறிஞர்களை திமுக எப்போதும் மதித்ததில்லை.
திமுகவினர் முப்பெரும் விழா எனக் கூறிவிட்டு பெரியார், அண்ணா, ஆகியோரின் படங்களை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இத்தகைய படங்களை தவிர்த்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் படங்களை தான் முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பொழுதுபோக்குக்காக கோடநாடு விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திமுக சொல்லுகிற படி அவர்கள் ஆடி வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எனவே யார் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லை.
மேலும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திப்பது என்பது மண் குதிரை போன்றது தான். ஏற்கனவே அவருடன் கூட்டணி சேர்ந்தவர்கள் கரையேறாத நிலையில் இருகின்றனர். டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரின் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி, அது மூன்று அடி கூட தாண்டாது. ஊழலைப் பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. சர்க்காரியா கமிஷன் முதல் கொண்டே சர்க்கரை ஊழல், வீராணம் ஏரி குழாய் ஊழல் எனப் பல்வேறு ஊழல்களை செய்தது திமுக ஆட்சி தான். நாட்டிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டதும் திமுக ஆட்சி தான்.
இத்தகைய ஊழல்களை எல்லாம் அறிக்கையாக தயார் செய்து அதனை ஆளுநரிடம் புகார் அளித்தவர் மறைந்த அதிமுக தலைவர் எம்ஜிஆர் தான். ஊழலை வெளிக்கொண்டு வர அதிமுக தயங்காது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது கட்சியை வளர்ப்பதற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று தவறு இல்லை. அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர்கள் செய்த நலத்திட்டங்களை அதிமுகவினர் தான் செய்ய முடியும். பிறர் அவர்கள் செய்த சாதனையை செய்ய முடியாது.