தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?" - ஜெயக்குமார் கேள்வி!

கள்ளச்சாராயம் குடித்து யாராவது இறந்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 17, 2023, 10:30 PM IST

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில், 63 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். அதிமுக உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும், ஆகஸ்ட் மாதம் அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது குறித்தும், கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், "பாராளுமன்றத் தேர்தலை நாம் முழுமையாக எதிர்நோக்கி அதன் மூலம் நாளை நமது நாளும் நமது, நாற்பதும் நமது என்ற அடிப்படையில் 40 தொகுதிகளிலும் கைப்பற்ற வேண்டும். உறுப்பினர் சேர்ப்பு முகாம்கள், அதன் மூலம் உறுப்பினர் புதுப்பித்தல் ஆகிய இரண்டும் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியாக நடைபெற்று வருகிறது.

நம்முடைய இலக்கு இரண்டு கோடி என்று அளவில் உள்ளது. அதையும் தாண்டி உறுப்பினர்களைச் சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்கிற கருத்தையும் கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கின்ற மாநாடு இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் எந்த ஒரு இயக்கமும் காட்டிடாத வகையில் மிக எழுச்சியான பிரம்மாண்டமாக இருக்கின்ற வகையில் மாநாடு நடத்த வேண்டும். அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேனாறும், பாலாறும் ஓடும் என்று சொல்லி இருந்தவர்கள், இரண்டு வருட ஆட்சியில் கள்ளச்சாராய ஆறு தான் ஓடி வருகிறது. காவல் துறை தலைமை பொறுப்பில் இருப்பவரே கொள்கை விளக்க குறிப்பில் கள்ளச்சாராய வழக்கில் எவ்வளவு பேர் கைது செய்து நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும். ஆனால், எடப்பாடி கேட்டிருந்த கேள்விக்கு கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்து குறித்து முதலமைச்சர் விளக்கம் ஏதும் இல்லை.

55 ஆயிரம் வழக்குகள் 760 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது என்று இப்போது டிஜிபி தெரிவிக்கிறார். இதை ஏன் கொள்கை விளக்க குறிப்பில் பதிவிடவில்லை. அதிமுக ஆட்சியில் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுத்தோம். ஒரு பயம் இருந்தது. இப்போது அரசின் மீது பயமில்லை யார் யாரோ கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள். டிஜிபி தற்போது நாங்கள் விழித்துக் கொண்டோம் என்று கூறுகிறார். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும். யாராவது இறந்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?

திமுகவினர் தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய முதலமைச்சர் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்தார். சட்டப்பேரவை உள்துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் குறித்து நடவடிக்கைகள் எடுத்து தொடர்பாக எந்த வழக்கும் கொள்கை விளக்க குறிப்பில் பதிவிடவில்லை. ஆனால் டிஜிபி தற்போது கைது செய்தவர்கள் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இது ஒரு மிகப்பெரிய தவறான செயல். இது யூட்டன் அரசு, சாதாரண பல்டி அடிப்பதில்லை, அந்தர் பல்டி.

இந்த மாதிரி ஒரு அந்தர்பல்ட்டி அடிக்கிற முதலமைச்சரை உலகத்தில் பார்க்க முடியாது. ஸ்டாலின் அதுலையும் கின்னஸ் சாதனை படைப்பார். நாட்டு மக்களுக்கு உண்மை தரும் எங்கள் ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராயம் கிடையாது, போதைப் பொருட்கள் கிடையாது. இன்னும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு மட்டும் 2.0 என்ற மாதிரி போலீஸ் விசாரணை நடக்கும். கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உள்துறையிடம் ஆளுநர் விளக்கம் கேட்டிருப்பது அவர்கள் இதற்கு விளக்கம் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் விற்பனையானது நடக்கும். முதலமைச்சருக்கு இதை கட்டுப்படுத்தும் துணிச்சல் கிடையாது. அதிமுக ஆட்சியில் நெற்றிக்கண் திறந்தால் குற்றம் என்பது போல யார் தவறு செய்தாலும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார். ஆனால், இப்போது அப்படி கிடையாது, யார் எந்த தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, வாய் சவடலாகவே உள்ளது" என கூறினார்.

இதையும் படிங்க:விஷச்சாராய உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றம் - காவல்துறை நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details