தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ' திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நடத்தக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்தலாம் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுரையின் அடிப்படையில் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி உள்ளாட்சியில் தொடரவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். ஆனால், திமுகவினர் தேர்தலை நிறுத்துவதற்கு சந்து, பொந்துகளில் உள்ள சட்டங்களை அலசி ஆராய்வார்கள். அவர்களுக்கு மக்களை சந்திப்பதற்குப் பயமாக உள்ளது.
உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனக் கூறியுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் தேர்தல் நடக்கும்.