சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, "மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனமருமான எம்ஜிஆர் திரை உலகிலும், அரசியலிலும் ஜாம்பவானாகத் திகழ்ந்தார். திமுகவை 13 வருடங்கள் வனவாசம் அனுப்பியவர். குடும்ப ஆட்சியை எதிர்த்தவர், எம்ஜிஆர்.
எடப்பாடி பழனிசாமியை சசிகலா சந்திக்க இருப்பதாகக் கூறிய கருத்தினை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் அனைவரும் இணைந்து ஒரே அணியாக செயல்படலாம். அதில் நாங்கள் தலையிடமாட்டோம். அதே நேரத்தில் அதிமுக கட்சி விவகாரங்களில் அவர்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். திமுகவைப் பொறுத்தவரை கட்சியை குடும்ப கட்சியாக்கிவிட்டது. கழகமே குடும்பம் என்பது போய் குடும்பமே கழகமாகிவிட்டது. எனவே அழகிரியும் திமுகவில் சேரலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு முறையான அழைப்புகள் வரவில்லை. மேலும் இல்லாத ஒரு பதவிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.