சென்னை:சென்னையில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்(Puratchi Thalaivar Dr MGR Central railway station) நிலையத்திற்கு நேற்று (ஜூன் 8), ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்து ஜன் சதாப்தி விரைவு ரயில் வந்தது. பின்னர், அங்கு பயணிகளை இறக்கி விட்டுவிட்டு ரயிலானது பேசின் பிரிட்ஜ் பணிமனைக்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, இரண்டு ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது. இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் அதனைச் சரி செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று (ஜூன் 8) நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மலை ரயில் புறப்பட்டது. அவ்வாறு புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் ரயிலில் இருந்த 4வது பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். அதேநேரம், ரயிலில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள், ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டு, பேருந்துகளில் மாற்றி பயணம் செய்ய வைக்கப்பட்டனர்.