சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியான இரண்டாவது மாடியின் போர்டிகோ பகுதியில் நேற்று (டிச.12) 20 வயது இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தார். அதன் பின்பு அந்த இளைஞர் திடீரென கதவு 3 பகுதியிலிருந்து தடுப்புச் சுவரைத் தாண்டி ஓரமாகச் சென்று சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே குதிக்க முயன்றார்.
இதை அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஏஎஸ்ஐ அங்கிரெட்டி என்பவர் இதைக் கவனித்துப் உடனடியாக பாய்ந்துச் சென்று அந்த இளைஞர் கைகளைப் பிடித்துக் கொண்டு கீழே குதிக்க விடாமல் தடுத்தார். ஆனால் அந்த இளைஞர் திமிறிக்கொண்டு கீழே குதிக்க முயன்றார்.இதை அடுத்து ஏஎஸ்ஐ அங்கு நின்ற சக பயணிகள் துணையுடன் அந்த இளைஞரை குண்டு கட்டாக தூக்கி மீண்டும் போர்டிகோ பக்கத்துக்குக் கொண்டு வந்தனர்.
விமான நிலைய மேலாளர் அறைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த இளைஞர் இவர்கள் கேட்ட கேள்விக்குச் சம்பந்தம் இல்லாமல் பதில் கூறினார். மேலும் அந்த இளைஞரிடம் செல்போன், அடையாள அட்டை எதுவும் இல்லை. தொடர்ந்து அந்த இளைஞரை விசாரித்தபோது அவருடைய பெயர் சோபன் முஸ்தாக் என்றும் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்து வருவதும் தெரிய வந்தது.