சென்னை:நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘ஜுஜுபி’ (Jujubee) பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஜெயிலர். நடிகைகள் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டப் பல்வேறு நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.
ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக வரும் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே இந்தப் படத்தின் காவாலா மற்றும் டைகர் கா ஹுக்கும் பாடல்கள் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பரவி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. இன்று (ஜூலை 26) மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இந்த பாடலை பாடி உள்ளார்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் அதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.