சென்னை:பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. எனினும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வகையில், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலகம் எதிரே உள்ள சாலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை, "ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்களின் குரலாக பிரதிபலித்து பேசிய தலைவர் ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
போராட்டத்திற்காக சிறை சென்ற குடும்பம், இரண்டு ஆண்டுகள் இல்லை. 20 ஆண்டுகள் சிறை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக எங்கள் தலைவரின் குரல் ஒலிக்கும். பொய்யும் புரட்டும் ஒருநாள் முடிவுக்கு வரும். நாடாளுமன்றத்தில் ஏற்படும் பிரச்னைகளை திசை திருப்ப ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இணைந்து செயல்படுகின்றன. இந்திய இறையாண்மைக்கு எதிராக இரு கட்சிகளும் இயங்கி வருகின்றன.