சென்னை:திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், மருத்துவமனை, கல்விக் குழுமம், விடுதி, மதுபான ஆலை, கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (அக்.9) சோதனை மேற்கொண்டனர்.
இந்த வருமான வரித்துறை சோதனையானது, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து, அது தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மகள் ஸ்ரீ நிஷா, மருமகன் நாராயணசாமி இளமாறன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஜெகத்ரட்சகன் இல்லத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலாஜி மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் அக்கார்ட் இன்டர்நேஷ்னல் பள்ளியின் கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்டவைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, நான்கு அட்டைப் பெட்டிகள் முழுவதும் வைத்து இரண்டு கார்களில் கொண்டு சென்றுள்ளனர்.