கரோனா தடுப்புப் பணியில் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்: ஜாக்டோ ஜியோ எதிர்ப்பு! - மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்
சென்னை: மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கும் மேல் உள்ள ஆசிரியர்களை கரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த ஜாக்டோ ஜியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகி மாயவன் கூறியதாவது, 'சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் வயது 50 வயதுக்கும் மேற்பட்டோராக உள்ளனர்.
மேலும், உடல்நிலை பாதிப்பிற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் உடல் நிலை, வயதைக் கருத்தில் கொள்ளாமல் அரசு நிர்வாகம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அவர்களது தேவைகள் குறித்து ஆய்வு செய்து, அதனை செயல்படுத்தும் பணிகளை வழங்கியுள்ளது.
இதற்காக இவர்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 50 வயதுக்குட்பட்டோர், உடல்நல பாதிப்பு இல்லாதவர்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.
இப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர் என்பதால், எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்' என்றார்.