சென்னை:புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட சரண்டர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், உயர் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவற்றில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று(மார்ச்.5) தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், "திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்படும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.