சென்னை:பழைய ஒய்வூதியத் திட்டத்தை மீண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு அமைத்துள்ள சோமநாதன் தலைமையிலான குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி அதற்கு முன்னரே அளிக்கப்பட்டது. நிதித்துறை அமைச்சரின் கருத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஏற்கனவே ஒன்றிய அரசு சோமநாதன் தலைமையில் ஒரு கமிட்டியைப் போட்டிருக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் சில முடிவுகளை எடுத்திருக்கின்றனர். தமிழ்நாடு இவற்றை எல்லாம் கூர்ந்தாய்வு செய்து, எது நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் நாம் கவந்தாலோசித்து, அதை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று பேசி தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல முடியும் என கூறியிருந்தார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தேர்தல் கால வாக்குறுதிப்படி நடைமுறைப்படுத்துவது குறித்த நிலைப்பாடு என்பது ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினையும் வேதனையினையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011-2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமலும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017ஆம் ஆண்டு முதல் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக தொடர்ந்து போராடி வரும், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவிடம் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வருவதற்கு சாத்தியமே இல்லை என்று உறுதியாக அன்றைய அரசின் நிலைப்பாட்டினை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிகவும் கவனமாக ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்த தேர்தல் வாக்குறுதியினை தவிர்த்தார்.
இந்நிலையில்தான், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிவிப்பில், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியினை அறிவித்தது. இது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தி, 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 25 மாதங்கள் கடந்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து இது நாள்வரை எந்தவித ஒரு முடிவினையும் அரசு அறிவிக்காத நிலையில் 22ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், அமைச்சரின் கருத்து என்பது உள்ளபடியே இந்த அரசால் தேர்தல் கால வாக்குறுதியான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமாகுமா? என்ற சந்தேகத்தினை அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் ஏற்படுள்ளது.
ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படி என்பது மூன்று முறை ஆறு மாத காலம் கடத்தி வழங்கி வரப்பட்ட நிலையில் தற்போது 1.7.2023 முதல் ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியினை உடனுக்குடன் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வழங்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையானது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தற்போதாவது சரண் விடுப்பிற்கான முடக்கம் நீக்கப்படும என்ற ஏக்கத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளார்கள். ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறையேற்றப்படாமல் இருப்பதைக் கண்டித்து 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியன்று கோட்டையினை முற்றுகையிடுவது என்று மூடிவு செய்த போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தற்போதைய நிதி மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியன்று தலையைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப் பேச்சுவார்த்தையின்போது, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவது குறித்து பேசும்போது , ஒன்றிய அரசு குழுவிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை தெள்ளத் தெளிவாக தெரிவித்தும், தற்போதைய நிதியமைச்சர் கருத்தானது தமிழ்நாடு அரசு இன்னும் தனது கருத்திலிருந்து பின் வாங்கவில்லை என்பதைக் காட்டுவதோடு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறிந்து கொள்கை முடிவினை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது என்பதனைத் தெளிவாக உணர்த்துகிறது.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள சோமநாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை அக்குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசினை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துத்தான் ஒன்றிய அரசு இக்குழுவிணை அமைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்த இரகசியம். மேலும், இக்குழுவினை அமைத்ததற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தினால் ஊழியர்களுக்கு எந்தவித பலனும் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல், இதனால் கார்ப்ரேட்டுகள் பெருத்த இலாபம் அடைகிறார்கள் என்பதால் ஊழியர்களிடையே ஒன்றிய அரசு மீது கடும் கோபம் எழுந்ததும் ஒரு காரணமாகும்.
அதோடு மட்டுமல்லாமல், இக்குழு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme-NPS) இணைத்து Pension Fund Regulatory Authority (PFRDA)வில் ஒப்பந்தம் செய்து கொண்ட மாநில அரசுகள் தான் இக்குழுவின் பரிந்துரை மீது கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை, ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையும் அரசின் பங்குத் தொகையும் முழுவதுமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு அரசு இன்றுவரை Pension Fund Regulatory Authority (PFRDA) உடன் எந்தவித ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை.
நிதியமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆந்திர அரசின் முடிவுகள் குறித்து ஏன் கவலைப்படுகிறார் என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்த ஒன்றாகும்.
பல்வேறு ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அமைப்புகளிடம் கலந்துரையாடல் நடத்திய பிறகு, ஒரேயொரு அமைப்பு கூட புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ஆதாரிக்காத சூழ்நிலையில் ஆய்வு வரம்புகளுக்கு எதிரான பரிந்துரைகளை அக்குழு அளித்திருந்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக அப் பரித்துரைகளை பொது வெளியில் வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில், நிதி மற்றும் மனிதவன மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கை தான் பொறுப்பேற்ற நாள் முதல் கேட்டறிந்து அதற்கு தீர்வும் கண்டு வரும் நிதி மற்றும் மனிதவள மோண்மைத்துறை அமைச்சர், மேற்சொன்ன அம்சங்களை கூர்ந்தாய்வு செய்து தேர்தல் கால வாக்குறுதியான மீண்டும் பழைய ஓவ்யூதித் திட்டத்தினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு, ஒன்றிய அரசின் குழுவிற்கும் ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அதில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:Honour Killing:நெல்லையில் ஆணவ கொலை? வேற்று சமூகப் பெண்ணை காதலித்த இளைஞர் சடலமாக மீட்பு