சென்னை:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று (ஜன.5) மாலை 5 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் தலைமைச் செயலக சங்கம் உள்பட அனைத்து சங்கங்களும் பங்கேற்க உள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை 2019ஆம் ஆண்டில் நடத்தினர்.
இந்த போராட்டத்தின்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, திமுக ஆட்சி அமைந்த உடன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். திமுக ஆட்சி அமைந்த பின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நம்பிக்கையில் இருந்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட கூட்டங்களிலும் கலந்து கொண்ட முதலமைச்சர், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் ஆட்சி அமைந்து 18 மாதங்கள் கழிந்த பின்னரும் தங்களுக்குரிய கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை என்பதால் ஜனவரி 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும், அதனைத்தொடர்ந்து மதுரையில் 8ஆம் தேதி கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 16 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பண்டிகை என்று 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு பரிசாக அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உள்ளிட்ட 16 சங்கங்களின் நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை அழைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், நிதிநிலை சரியான உடன் தங்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.