ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, அவர் பேசுகையில், "ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்பொழுது முதல்வரின் அழைப்பை ஏற்று, மாணவர்களின் தேர்வினை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட ஜாக்டோ ஜியோவின் நடவடிக்கைகள் தற்போதுதான் மீண்டும் துவங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது , 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு அவர்கள் மீது போடப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
இதுகுறித்து, எங்களின் கோரிக்கையை முதலமைச்சர் அமைச்சர்கள் அரசு செயலாளர்களிடம் அளித்து 15 நாட்கள் அவகாசம் அளிக்கவுள்ளோம். பின்னர், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு அறிவிக்கப்படும்.
அண்ணா, எம்ஜிஆர் ,ஜெயலலிதா போன்றவர்களின் காலத்திலும் போராட்டம் நடத்தினோம். அப்போது அவர்கள் எங்களை அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்ப்பார்கள். எனவே அரசுக்கும், அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்.
ஆளும் கட்சியில் அவர்களுக்குள் குழப்பம் நிலவுகிறது ஜாக்டோ ஜியோ
பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் கழிவறைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பாமல் புத்தகங்களை அனுப்பிவிட்டதாக கூறுகிறார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களை மிரட்டும் வகையிலும் ஜென்மத்திற்கும் போராடக் கூடாது என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். எனவே முதலமைச்சர் அவரை அழைத்து அறிவுரை கூற வேண்டும் , தேர்தலுக்கு முன்பே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் யாரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறவில்லை, மக்களாக வாக்களித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிமுக அரசுக்கு தற்போது தேர்தலில் கிடைத்த இடங்கள் கூட கிடைக்காமல் போகும் என கூறினார்.